Movie Review


Double Acting and Movie Review and Tamil Movie and சூரியா19 Nov 2008 12:00 pm

வார‌ண‌ம் ஆயிர‌ம்

  • ஒரு வ‌றிய‌‌ குடும்ப‌த்தில் த‌ந்தைக்காக‌ எடுக்க‌ப்ப‌ட்ட‌து சேர‌னின் த‌வ‌மாய் த‌வ‌மிருந்து.
  • ஒரு ந‌டுத்த‌ர‌ குடும்ப‌த்தில் த‌ந்தைக்காக‌ எடுக்க‌ப்ப‌ட்ட‌து கௌத‌மின் வார‌ண‌ம் ஆயிர‌ம்.

இது தான் ப‌ட‌ம். த‌வ‌மாய் த‌வ‌மிருந்து போல‌வே மிக‌ நீள‌மான‌, மிக‌வும் குறைந்த‌ வேக‌த்தில் ந‌க‌ரும் ப‌ட‌ம்.

என‌க்கு இந்த‌ப் ப‌ட‌ம் கொஞ்ச‌ம் ய‌தார்த்த‌ம் குறைந்த‌தாக‌வே காண‌ப்ப‌டுகிற‌து. ந‌டுத்த‌ர‌ குடும்ப‌த்து த‌ந்தை த‌ன‌து ஒரே ம‌க‌னை, ஒரு பெண் பிள்ளையையும் வைத்திருப்ப‌வ‌ர், ப‌ண‌ம் செல‌வ‌ழித்து இந்தியாவில் இருந்து அமெரிக்கா அனுப்புவாரா ம‌க‌னின் காத‌லியைக் க‌ண்டுபிடிக்க‌? எந்த‌ வித‌ யோச‌னையும், எதிர்ப்பும் இல்லாம‌ல் ஒரு த‌ந்தை அனுப்புகிறார் என்ப‌து ய‌தார்த்த‌த்திற்கு ஒத்துவ‌ராத‌து போல் தோன்றுகிற‌து. இந்தியாவில் இருந்து அமெரிக்கா போக‌ ஏற்ப‌டும் விமான‌ச் சீட்டின் செல‌வே அதிக‌ம், ப‌த்தாத‌த‌ற்கு அமெரிக்காவில் 90 நாட்க‌ள் இருக்கிறாராம். சில‌ வேளை கௌத‌மின் த‌ந்தை அப்ப‌டி அனுப்பினாரோ என‌க்குத் தெரியாது.

ஆனால், வேறு எந்த‌ க‌தாநாய‌க‌னுக்கும் கிடைக்காத‌ வாய்ப்பு சூரியாவிற்கு என்று சொல்லுவேன். இந்த‌ப் ப‌ட‌த்தில் ப‌ல‌ வித‌ கெட்ட‌ப்பில் சூரியா வ‌ல‌ம் வ‌ருகிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு ப‌டியிலும் சூரியா வித்தியாச‌மாக‌த் தெரிகிறார். அவ‌ரின் அழ‌குத் தோற்ற‌ம் ஒவ்வொரு வேச‌த்திற்குமே அழ‌காக‌த் தான் இருக்கிற‌து. ஒன்றுகூட‌ இர‌சிக்க‌ முடியாம‌லில்லை. நான் நினைக்கிறேன், க‌ம‌ல் ஹாச‌னுக்குப் பிற‌கு ப‌ல‌ வித‌ கெட்ட‌ப்புக‌ள் அழ‌காக‌ப் பொருந்திய‌ ஆள் சூரியா என்று சொல்ல‌லாம்.

த‌ந்தையாக‌ வ‌ரும் சூரியா ந‌டிப்பில் முதிர்ந்து தெரிகிறார். வேறுப‌டுத்திக் காட்டிய‌தால், நான் முத‌லில் வேறு யாரோ என்று எண்ணிவிட்டேன். ஒப்ப‌னை ந‌ன்றாக‌வே செய்திருக்கிறார்க‌ள் ப‌ட‌ம் முழுக்க‌.

பாட‌ல்க‌ள் எல்லாம் இர‌சிக்க‌க் கூடிய‌தாக‌வே இருக்கிற‌து. ஜோக்கிற்கு என்று யாரும் த‌னியாக‌‌ இல்லை. சூரியாவே செய்கிறார். ஆனால், ஜோக் அதிக‌மாக‌ இல்லை என்ற‌ ஏக்க‌ம் வ‌ர‌வில்லை.

ம‌க‌ன் திரும‌ண‌ம் செய்து பிள்ளை உண்டு என்று காட்டுகிறார்க‌ள், ஆனால், ம‌க‌ள் அப்ப‌டியே இருக்கிறா.

என‌க்கு என்ன‌மோ சேர‌னின் த‌வ‌மாய் த‌வ‌மிருந்து ப‌டம் அள‌விற்கு இது தாக்க‌த்தை ஏற்ப‌டுத்த‌வில்லை. த‌வ‌மாய் த‌வ‌மிருந்து ப‌ட‌த்தில், த‌ந்தை வ‌ல்ல‌வ‌ர், சூர‌ர், ந‌ல்ல‌வ‌ர் என்று சொல்லி சொல்லி க‌தை ந‌க‌ர‌வில்லை. ய‌தார்த்த‌மாக‌ ந‌க‌ர்ந்து த‌ந்தையின் க‌தாபாத்திர‌த்தை உண‌ர்த்தி நிற்கிற‌து. வார‌ண‌ம் ஆயிர‌ம் ப‌ட‌த்தில் த‌ந்தையைப் புக‌ழ்ந்தே க‌தை ந‌க‌ர்கிற‌து. இன்னும் சொல்ல‌ப் போனால், ம‌க‌னின் க‌தையே!

Movie Review and Tamil Movie and நந்தா and ஷெரின்04 Oct 2007 09:39 am

நல்ல கலர்வுல்லான திரையோட்டம்.

உற்சாகம்

அருமையான பாடல்கள் [முத‌ல் பாடலைத் தவிர‌]. “நறும் பூக்கள் தேடும் திருத்தும்பியே…” எனக்குப் பிடித்த பாடல். நல்ல காட்சியமைப்பு. ஷெரினை இந்தப் பாட்டில் தான் நன்றாக உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். 😉 வேறு எங்கும் ஆபாச‌மே இல்லை.

ந‌ந்தா அள‌வுக்க‌திக‌மாக‌ மெலிந்து விட்டார். முத‌ல் இருந்த‌ handsome இப்போது குறைவே. வில்ல‌னுக்கும் க‌தானாய‌க‌னுக்கும் தாடியை எடுக்க‌ இய‌க்குன‌ர் விட‌வில்லை போலும். எப்போதும் தாடியுட‌னே அலைகிறார்க‌ள். ஆனால், ந‌ன்றாக‌த் தான் இருக்கிற‌து.

விவேக்: சிரிப்பு வரவில்லை.

Movie Review and Tamil Movie and தங்கர் பச்சான்03 Oct 2007 07:57 am

சேரனின் “Autograph” படத்தை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் “பள்ளிக்கூடம்”.

இள வயது கதாநாயகன், கதாநாயகியாக இருவர் நடித்திருக்கிறார்கள்.

அதே போல் பழைய நினைவுகளை அசை போட்டு யதார்த்தத்தை படம்பிடித்திருக்கிறார்கள். பாடசாலை போன அனைவருக்கும் ஓர் உணர்ச்சிக் காவியமாக பொங்கி வழியும் என்பதில் ஐயமில்லை. பாடசாலை போகாதவர்களை கட்டாயம் ஏங்க வைக்கும்.

சினேகா [கோகிலாவாக] மிகச் சரியான தேர்வு. உணர்ச்சிகளை அழகாக வெளிப்படித்தியிருக்கிறார். அட தங்கர் பச்சான் [படத்தின் இயக்குனர்] கூட அழகாக நடித்திருக்கிறார் “ஐயோடி குமரு” ஆக.

பாடல்கள் அற்புதமாக இருக்கிறது. இசையும் வரியும் மனதிற்கு நெகிழ்ச்சியைக் கொடுக்கிறது. குத்துப் பாட்டை எதிர்பார்க்காதீர்கள். ஆனால், இள வயது கதாநாயகன், கதாநாயகியாக இருவர் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு பாட்டு வரும். அது இளவட்டங்களை ஏங்கவைக்குதோ (அ) தூங்க விடாமல் வைக்குதோ தெரியாது. கிராமத்துக் கலாச்சாரத்தில் இவ்வளவு நெருக்கமாக காட்டியுருப்பது சற்று அதிகமோ என்று யோசித்தால் கூட, அது பாட்டில் மட்டுமே என்பதால் பரவாயில்லை என்பது என் எண்ணம்.

சினேகாவின் நடிப்பை சொல்லி வேலையில்லை. படத்தைப் பாருங்கள். நெற்றியிலிருந்து கழுத்துவரை நடிக்கிறது.

எனக்கு இந்தப் படத்தின் தாக்கம் சற்றுக் குறைவாகவே இருக்கிறது. ஏனெனில், இலங்கையின் இனப்பிரச்சினை காரணமாக், நான் ஒரு பள்ளிக்கூடத்தில் என்று நெடுங்காலம் படிக்கவில்லை. இலங்கை இராணுவ ஆக்கிரமிப்பு, இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு என்று எப்போதும் ஊர் விட்டு ஊர் ஓடிக்கொண்டே இருந்ததால் ஒரு பள்ளிக்கூடத்துடனும் எனக்கு நெருக்கமான உணர்வு உருவாகவில்லை.

சரி என்னைப் போல் களவாக படத்தை இணையத்தில் தரையிறக்கி கணினியில் பார்க்காமல், திரையரங்கிற்குச் சென்று பாடசாலை நண்பர்களுடன் பாருங்கள்.

pallikoodam

Movie Review and சத்தியராஜ் and வரலாறு19 Jul 2007 07:57 am

“பெரியார்” படம் பார்த்து முடிததுவிட்டேன்.

பெரியார் கம்யூனிசத்தை ஆதரித்தார் என்று எனக்கு இப்பத் தான் தெரியும்.
பெரியார் தான் வகுப்பு வாரி அனுமதி வேலைவாய்ப்பைக் கொண்டுவர காரணமானவர்
என்றும் இப்பதான் தெரிகிறது. [சாதி முறையில் வேலை வாய்ப்பு]

“பெரியார்” படத்தில் அவர் கம்யூனிசத்தை ஆதரிப்பதாகத் தான் சொல்கிறார்.
கம்யூனிசம் வேண்டும் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த என்றும், சாதியை முதலில்
ஒழிக்க கம்யூனிசத்தை சற்று தள்ளி வைப்போம் என்றும் சொல்கிறார். அவர்
சொல்கிறார், தன்னை பொருளாதாரம் வேண்டுமா, சாதி ஒழிய வேண்டுமா என்று கேட்டால்
சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வேனாம். ஏனெனில், எவ்வளவு பொருளாதாரத்தில்
உயர்ந்தாலும் தாழ்த்தப்பட்ட சாதிக் காரன் எப்பவும் அப்படியே இருப்பதாகவும்,
உயர்ந்த சாதிக் காரனுக்கு மரியாதை செலுத்தவேண்டி உள்ளதாலும், பொருளாதார
சீர்திருத்தத்தை [கம்யூனிசத்தை] சற்றுத் தள்ளி வைப்போம் என்கிறார்.
இன்னும் அப்படியே இருக்கு தமிழகம்!

Movie Review and Tamil Movie10 May 2007 11:24 am

ஒளிநாடாவில் பார்த்தேன்.

14 வருடங்களுக்கு முன் எடுத்த படம் அரக்கப் பழசாகத் தான் இருக்கிறது.

கோஷ்டிச் சண்டைகள், உண்மைக்குப் புரம்பான படம்.

குப்பி” படத்திற்கும் குற்றப்பத்திரிகைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத தூரம்.

Movie Review and Tamil Eelam Movie and Tamil Movie08 Jan 2007 01:00 pm

விடுமுறைக்கு Toronto சென்று மீண்டும் Montreal வரும்போது, தமிழ் பேரூந்தில் இந்தப் படத்தைப் போடுங்கோ என்று எனது குறுந்தட்டைக் கொடுத்தேன்.

ஈழப் படம் போல் இருக்கே என்று கொஞ்சம் ஆவலாக பார்க்கத் தொடங்கினேன். நான் இதற்கு முன் இந்தப் படம் பற்றிக் கேள்விப்படவே இல்லை.

முதல் காட்சியிலேயே அவர் கதைக்கும் ஆங்கிலத்தை வைத்து லண்டனில் இருந்து வருபவர் என்று அறிந்துகொண்டேன். அவர் கதைக்கும் தமிழ் சற்று வித்தியாசமாக இருந்தது. தமிழின் ஒவ்வொரு சொல்லையும் அழுத்தி முடிக்க மாட்டார். ஏதோ சிங்களவன் (அ) மலை நாட்டுத் தமிழர்கள் தமிழ் பேசுவது போல் இருந்தது. சரி லண்டனில் இருந்தவர் தமிழை மறந்திட்டார் என்று யோசித்துக்கொண்டேன்.

படத்தின் முன்கதை [flashback] மிக நீளமாக இருந்தது. காட்சியமைப்பு மிகவும் நன்று.

சரி விசயத்திற்கு வருவம். படத்தில், பாடசாலைக்குச் செல்லும் வளியில், இளைஞன் ஒருவனைக் கூட்டிச்செல்ல சக இளைஞனர்களும், யுவதிகளும் துவிச்சக்கர வண்டிகளில் [bicycle] வருவார்கள். அவர்களுக்குள் கதைக்கும் ஆபாச வசனங்கள் காது கூச வைக்கிறது. உண்மையில் வன்னியில் கதைத்திருக்கலாம். அதாவது, ஆண்கள் குழுமமாக இருந்திருந்தால் கதைத்திருக்கலாம். அதே போல் பெண்கள் மட்டும் இருந்திருந்தாலும் கதைத்திருக்கலாம். ஆனால், இருபாலாரும் சேர்ந்து இவ்வளவு ஆபாச பேச்சு நம்பும்படியாக இல்லை.

அதில் தொடங்கிய ஆபாசப் பேச்சு படம் முழுக்க தொடர்கிறது. ஏனடா இந்தப் படத்தைப் போடச்சொல்லி சாரதியிடம் கொடுத்தேன் என்று எனக்கு இருந்தது. பாடசாலையில் ஆசிரியையும் ஆபாச பேச்சுத் தான். அது ஒரு ஆண் ஆசிரியர் கதைத்ததாக இருந்திருந்தாலும் நம்பி இருக்கலாம்.

ஊரில், பெண்களுடன் சேர்ந்து ஒரு group project செய்வதற்கே மிகக் கடினம். ஆண்கள் வேறாக, பெண்கள் வேறாகத் தான் பிரித்து விடுவார்கள். இதில் இவ்வளவு ஆபாச பேச்சுக்கள் பெண்களே கதைப்பதாகக் காட்டியிருப்பது ஏன் என்று புரியவில்லை. அட அதைக் கூட நாசூக்காகச் சொன்னால் கூட பறுவாயில்லை. பச்சை பச்சையாக எல்லா இயக்குனர் சொல்ல வைத்திருக்கிறார்.

மற்றது, அடிக்கடி “தோட்டக்காட்டு…” என்று சொல்லித் தான் மலைய தமிழர் குடும்பத்தை பேசுகிறார்கள், முதலாளிகள். தொழிலாளியை, முதலாளி மதிப்புக்குறைவாக நடத்துவது ஒன்றும் புதிதான விடயமல்ல. எல்லா இடத்திலும் கூலித் தொழிலாளிகளைக் கேவலாமகத் தான் நடத்தினார்கள். ஆனால், “தோட்டக்காடு” என்பது ஏதோ ஒரு சாதி போல் அதைச் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறார் இயக்குனர். சில நேரத்தில் மலையகத்தில் அவ்வாறு இருந்திருக்குமோ தெரியவில்லை. ஊரில், குறைந்த சாதிக் காரர்களை ஒரு போதும் சாதி சொல்லிக் கூப்பிடுவதில்லை. அவர்களுடைய பெயரைச் சொல்லியோ, அல்லது செல்லப் பெயரைச் சொல்லியோ கூப்பிடுவார்கள். தங்களுக்குள் கதைத்துக்கொள்ளும் போது தான் சாதி சொல்வார்கள்.

இந்திய திரையில் வரும் வில்லன்கள் போல், மச்சி நீ அவளை “முடிச்சிட்டு” எனக்குத் தா என்று இளைஞர்களைக் கதைக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

ஈழக் கலைஞர்கள் அவ்வளவு பேரும் ஏதோ மலையக (அ) சிங்கள தமிழர்கள் தமிழ் கதைத்தது போல் பேசுகிறார்கள். உ+ம்: “ஏன்” என்று உச்சரிக்காமல்” “ஏ[ன்]”… என்று அழுத்தம் குறைவாகவே உச்சரிக்கிறார்கள். வன்னித் தமிழ் இவ்வளவு திரிபடைந்த‌தா என்று தெரியவில்லை.

சரி, எல்லாவற்றிற்கும் ஒரு மணிமுடி வைத்தது போல், தென்னந்த் தோப்பில் ஒரு BBQ Party. கோழி பொரிச்சு கிழவிமார்கள் டிஸ்கோ டான்ஸ்! யுவதிகள் போட்டிருக்கும் உடையென்ன, அவர்கள் ஆடும் ஆட்டம், வயது போனவர்கள் கூட டிஸ்கோ டான்ஸ் ஆடுகிறார்கள், அதுவும் துணை மாற்றி! கன்றாவி! இய‌க்குன‌ர் அவ‌ர்க‌ள் எல்லோரும் ல‌ண்ட‌னில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள் என்று காட்டியிருந்தாலும் த‌ப்பி இருப்பார்.

வ‌ன்னி, க‌ன‌க‌ராய‌ன் குழ‌ம் புலிக‌ளின் க‌ட்டுப் பாட்டுப் ப‌குதி போல் தெரிய‌வில்லை. ஏனெனில், இல‌ங்கை காவ‌ல்துறை ஒரு விசார‌ணைக்காக‌ வ‌ருகிறது. வந்து, இந்திய சினிமாவில் லஞ்சம் வாங்குவது போல் இங்கேயும் வாங்கிச் செல்கிறது. இறுதியில், இராணுவ‌ க‌ட்டுப்பாட்டுப் ப‌குதியில் ஒரு இளைஞ‌ன் கையில் துப்பாக்கி எப்ப‌டி என்றும் தெரிய‌வில்லை. இய‌க்க‌ம் வ‌ருவ‌தாக‌ ஒரு க‌ட்ட‌ம். ஆகா, சிங்களத் திரைப் படத் தாக்கம்.

படத்தில், இந்திய/ சிங்கள திரைப் படத் தாக்கம் அதிகமாகவே தென்படுகிறது.

வன்னி, கனகராயன் குழத்தில் வசித்தவர்கள் ஏதாவது சொன்னால் தான் தெரியும், உண்மையில் இப்படியான சமூகம் இருந்ததா இல்லையா என்று. யாராச்சும் அப்படி இருந்து இந்தப் படத்தைப் பார்த்தால் இங்கே உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.

Movie Review and Nayanthara and Rema Sen and Simbu and Tamil Movie30 Oct 2006 12:40 pm

சரியான கூட்டம். வேட்டையாடு விளையாடுவிற்கு வந்த மாதிரி சனம்.

தொடக்கத்திலேயே “தலைவன்” என்று புகழ்ந்து தான் சிம்புவை அறிமுகப்படுத்துகிறார்கள். அப்போதே விளங்கிவிட்டது இது மன்மதன் மாதிரி தற்புகழ்ச்சி இல்லாத படம் இல்லை என்று.

மன்மதன் தவிர்ந்த மற்றய படங்கள் மாதிரி இல்லாமல் வசனங்களை சற்றுக் குறைத்திருக்கிறார். ஆனாலும் வசனங்களும், ஸ்டைலும் அதிகம் தான். அவருக்கு குறைவு, நமக்கு அதிகமுங்க.

பாடல், இசை, ஒளியமைப்பு அற்புதம்! நகைச்சுவை இரசிக்கலாம்.

இருந்தாலும், தனுசைக் குறிவைத்தே முழுவதும் இருக்கிறது. வயது கூடிய பெண்ணை திருமணம் செய்வது, முதல் காதலி தன் காதலை புரிந்து கொள்ளவில்லை, அம்பானி பொண்ணை கலியாணம் கட்டி பெரியாள வர நீ ஆசைப்படுறாய் ஆனா நான் அம்பாணீயாவே வர ஆசைப்படுறன், காதல் தோல்வி என்றால் நான் காவல் நிலையம் கோர்ட் என்று போக மாட்டேன் [தனுசின் “தேவதையைக் கண்டேன்”], இப்படி போகுதுங்க.

இது ஏதோ, தனுசிடம் தோற்றுவிட்டேன் என்று கோபமாக அவரை வையிறது மாதிரி இருக்கிறது. தனுஸ் இதுவரைக்கும் சிம்புவிற்கு எதிராக எந்தப் படத்திலும் செய்தது இல்லை. அவர் அப்படி செய்யாமல் இருக்குமட்டும் சிம்பு தோற்றதாகவே உணருவார் என்பது என் எண்ணம்.

என்னமோ சிம்புவின் தற்புகழ்ச்சிக்கு படத்தில் குறைவேயில்லை. இதை ஆணவமாகத் தான் நான் பார்க்கிறேன்.

எனக்கோ இடைவேளை வரமுன்பே எப்போ படம் முடியும் என்றாகிவிட்டது.

இருந்தாலும், இளவட்டங்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை. தனக்கென்றொரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிவிட்டார். அதனால், இனி சிம்பு தோற்பார் என்பது ஐயமே.

எனக்குப் பிடித்த கட்டம்:
சிம்புவிற்கும் நயந்தாராவிற்கும், திருமணமாக முன்பே உடலுறவு முடிந்து விடும். கமல் படங்களில் வருவது போல் ஒரு காட்சி. முடிந்த பின் நயந்தாரா அழுவார் “நான் தப்பு செய்துவிட்டேன்”. சிம்பு சொல்வார் “எல்லாப் பொண்ணுகளும் முடிஞ்சதுக்கப்புறம் இதைத் தான் சொல்லுறாங்க”. திரையரங்கில் விசில் கூரையைப் பிய்த்தது!

ஹுரே ஹுரே பாடலில் ஆங்கில பாடல் காட்சியமைப்பில் rap செய்வது போல் செய்திருக்கிறார். அதில் சிம்பு தமிழ் நடிகர்களில் எல்லாரையும் மிஞ்சிவிட்டார். இதனால், வெளிநாடுவாள் தமிழ் இளவட்டங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

ரீமா சென் தன் நடிப்புத்திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இருந்தாலும் சற்று அகோரமாக எந்த மேக்கப்பும் இல்லாமல் அவரை பள்ளி மாணவியாக வலம்வர வைத்தது அசிங்கமாக இருக்கிறது.

ரீமா சென்னுக்கும் சிம்புவிற்கும் காதல் வெளிப்படும் காட்சியில் வசனமே பேசாமல் முகபாவனையில் சிம்பு நன்றாக செய்திருக்கிறார்.

கடைசி 30 நிமிடங்கள் இழுவை. படையப்பாவை re-make செய்திருக்கிறார்.

லாஜிக் பிழைக்கும் கட்டங்கள்:

நயந்தாரா வீட்டில் சிம்பு அறையில் இருக்கும்போது [உடலுறவுக்குப் பின்] நயந்தாராவின் பெற்றோர் வந்துவிடுவார்கள். பிறகு என்ன நடந்தது என்றே காட்டவில்லை.

ச‌ந்தியா க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌வுட‌ன் சிம்பு அந்த‌ இட‌த்திற்கு அன்றிர‌வே போய்விடுவார். எப்ப‌டி தக‌வ‌ல் கிடைத்த‌து?

அள‌வுக‌ட‌ந்த‌ காத‌ல் வைத்துள்ள‌ சிம்பு ஒரு அடிமைபோல் இருக்கிறார். ம‌று விநாடியே புய‌லாக‌ மாறுகிறார். ச‌டாரென்று இப்ப‌டி மாற்ற‌ம் ஏற்ப‌டுமா?

இவ‌ற்றைப் பார்க்கையில், ம‌ன்ம‌த‌ன் ப‌ட‌த்தில் கோபித்துக்கொண்டு போன‌ இய‌க்குன‌ரின் ஆற்ற‌லால் தான் வெற்றி பெற்ற‌தோ என்று எண்ண‌த் தோன்றுகிற‌து.
_____
CAPital

Ajith and Asin and K.S. Ravikumar and Movie Review and Tamil Movie and Triple Acting27 Oct 2006 09:00 am

பல நாள் எதிர்பார்த்து இருந்த படம். கே. எஸ். ரவிகுமாரின் படம். super star இக்குச் செய்யப்பட்ட கதை என்று பிரபலமாக பேசப்பட்ட படம்.

இரவு 10:00 மணிக்கு படம் என்று 10:30 இக்குத் தான் போட்டார்கள் இங்கு மொன்றியலில் [கனடா]. இது வழமையாகிவிட்டது. ஆனால், திரை முக்கால்வாசி நிரம்பியே இருந்தது.

இரவு 7:30 show பார்த்துவிட்டு வெளியில் வருபவர்கள், நல்ல படம் என்று சொன்னதைக் கேட்டு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அஜித்தின் சற்று முந்தய படங்கள் அத்தனையும் தோல்வியில் முடிவுற்றிருந்தது. சமீகாலத்தில் தான் சற்று ஏறுமுகமாக இருக்கிறது. இருந்தாலும் இப்போது அஜித் முன்புபோல் நடிப்பை வெளிக்காட்டுகிறார் இல்லை என்பது குற்றமாக இருந்தது.

இவ்வளவு இருந்தாலும் “தல” இன் படத்தைப் பார்க்காமல் விட மனமில்லாமல் போனேன்.

முதல் ஐந்து நிமிடத்திலேயே பாட்டு வந்தது. என்ன ஆச்சரியம், அஜித் நன்றாக நடனமாடுகிறார். ஐயோ நான் பரத நாட்டியத்தைச் சொல்லவில்லை. நிஜமாகவே dance ஆடுகிறார். நடன ஆசிரியர் உண்மையிலேயே அஜித்தை ஆட வைத்திருக்கிறார். இதே நடன‌ ஆசிரியர் தான் “வல்லவன்” பட நடன ஆசிரியரும். அஜித்தின் குறையாக எப்போதுமே இருந்தது அவரின் நடனங்கள் பார்க்க சகிக்க முடியவில்லை என்பது தான். ஆகா எடுத்த உடனையே தல ஆச்சரியத்தைக் கொடுத்துட்டாரே என்று கொஞ்சம் நிம்மதியாக உட்கார்ந்தேன். இந்தப் பாடலைப் பார்த்து அஜித்தின் நடனத்தில் நிறைவு காணவில்லையென்றால், இனி நான் கீழ் சொல்லுவனவற்றை நம்பாதீர்கள்.

அஜித் படத்தில் பின்னி எடுத்திருக்கிறார். ஒவ்வொரு வேடமும் தனித்தனியாக மனதில் நிற்கிறது. எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி என்ற சொல்லுக்கே வாய்ப்பில்லை. தகப்பனாக இருக்கட்டும், பரத நாட்டியக் கலைஞனாக இருக்கட்டும், வில்லனாக இருக்கட்டும் பின்னி எடுக்கிறார். பணக்கார இளைஞனாக வருவது தான் இவர்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருக்கிறது. அட வில்லனாக நடிக்கும்போது மற்றய படங்களில் வில்லன் மேல் எப்படி வெறுப்பு வருமோ அப்படி வருகுதப்பா. உண்மையா.

அட முக்கியமாக ஒன்றைச் சொல்ல மறந்துட்டேன். அஜித் “வாலி” படத்திற்குப் பின் இந்தப் படத்தில் தான் “நடித்திருக்கிறார்”. ஆமாங்க, மனிசன் பல கட்டங்களில் மிக நன்றாக நடித்திருக்கிறார். முக பாவனையோடு நடித்திருக்கிறார்.

இந்த‌ப் ப‌ட‌த்திற்காக‌ அஜித்திற்கு ஒரு award க‌ண்டிப்பாக‌ கிடைக்கும். [அட‌ ந‌ம்ம‌ சேர‌ன் ப‌ட‌ம் இந்த‌ வ‌ருட‌ம் வெளிவ‌ராம‌ல் இருந்தால்].

என்ன‌டா எல்லாத்தையும் சொல்லுறான், அந்த‌ ப‌ர‌த‌ நாட்டிய‌க்கார‌னைப் ப‌ற்றி சொல்ல‌வே இல்லை என்று யோசிக்கிறீங்க‌ளா? அட‌ நீங்க‌ வேற‌ அதை சொல்லுற‌துக்கு த‌மிழில் வார்த்தையே கிடைக்க‌லைங்க‌ [கொஞ்ச‌ம் ஓவ‌று?]. அஜித் மிக‌வும் பாராட்ட‌த்த‌காத‌ அபிந‌ய‌ங்க‌ளுட‌ன் ந‌டித்திருக்கிறார். அஜித்தால் இப்ப‌டியும் ந‌டிக்க‌ இய‌லுமா என்ற‌ ச‌ந்தேக‌மே வ‌ருகுத‌ப்பா. [இந்த‌க் க‌தை உண்மையில் super star இற்குச் செய்ய‌ப்ப‌ட்டதாக‌ இருந்தால் ந‌ம்ம‌ super star எப்ப‌டி ந‌டித்திருப்பார் என்று புரிய‌வில்லை]. க‌ம‌ல், விக்ர‌ம் அவ‌ங்க‌ளோட‌ அஜித்தையும் சேர்க்க‌லாம் போல‌ இருக்குப்பா. ம‌னிச‌ன் ந‌ட‌க்கேக்க‌, திரும்பேக்க‌, சிரிக்கேக்க‌, ஏன் அழேக்க‌ கூட‌ அபிந‌ய‌த்தோட‌ க‌ல‌க்கியிருக்கிறார்.

ஆனால், ஒன்றே ஒன்று Matrix ஆங்கில ப‌ட‌ம் வ‌ந்தாலும் வ‌ந்துச்சு, எல்லோரும் துப்பாக்கித் தோட்டாவை த‌ங்க‌ள் மேல் ப‌டாம‌ல் ச‌ரிந்து த‌ப்ப‌ ப‌ழ‌கிக்கொண்டார்கள். இது ஒரே ஒரு க‌ட்ட‌ம் தான். ம‌ற்ற‌ப‌டி ஓகே.

பாட‌ல்க‌ள் அம‌ர்க்க‌ள‌ம்.

முற்பாதியில் நிறையவே வரும் அசின், பிற்பாதியில் சற்றுக் காணாமல் போய்விடுகிறார். இருந்தாலும் ஒரு மாதிரியா தான் இருக்காங்க. அஜித்தின் அம்மாவாக வருப ரொம்ப கிழுகிழுப்பூட்டுறா [அட flash back இல அவ இளமை]

என்ன‌ இருந்தாலும், ந‌ம்ம‌ க‌ம‌ல்காச‌னுக்கு அப்புற‌ம் ப‌ர‌த‌ நாட்டிய‌ வேட‌ம் ஏற்று அஜித் தான் ந‌டித்திருக்கிறார் [முன்ன‌ணி க‌தாநாய‌க‌ன்க‌ளில்]. அதுவும் இப்ப‌டி ஒரு க‌தையோடு வேறு ஒரு வ‌ரும் ந‌டிக்க‌ வ‌ர‌மாட்டார்க‌ள். த‌ங்க‌ள் image போய்விடும் என்று ப‌ய‌ப்பிடுவார்க‌ள். அஜித்தின் ட‌ய‌லாக்குக‌ளும் இல்லை.

என‌க்குப் பிடித்த‌ க‌ட்ட‌ம்:
ர‌மேஷ் க‌ண்ணா ஒரு க‌ட்ட‌த்தில் “என்ன‌ காத‌லுக்கு ம‌ரியாதையா என்பார்”. அஜித் ஒரு பார்வை பார்ப்பார். உட‌னே ர‌மேஷ் க‌ண்ணா “நீதான் ‘காத‌ல் ம‌ன்ன‌ன்’ ” என்று சொல்லி சில‌ அஜித்தின் ப‌ட‌ங்க‌ள் பெய‌ர் சொல்லுவார். க‌டைசியில் “இவ‌ன் ‘அட்ட‌காசம்’ தாங்க‌ முடிய‌ல‌ப்பா” என்று சொல்லுவார். இப்ப‌டியும் ட‌ய‌லாக் வைக்க‌ அஜித் அனும‌தித்து இருக்கிறார் த‌னே.

தர்மபுரி ரஜினியாக, சலங்கை ஒலி கமலாக, கடைசியில் “நாயகன்” ஆக முடிகிறது.

குடும்ப‌த்தோடு போய்ப் பார்க்க‌லாம். ஆபாச‌க் க‌ட்ட‌ங்க‌ளோ, அகோர‌க் காட்சிக‌ளோ இல்லை.

_____
CAPital

Movie Review and Tamil Eelam Movie and Tamil Movie02 Oct 2006 12:20 pm

ஆணிவேர்

எனது வரிசையின் இருமருங்கிலும் வெள்ளைக்காரங்கள் உட்கார்ந்து
இருந்தார்கள். எனக்கு ஆச்சரியமாகக் கூட இருந்தது. அட வெள்ளைக்காரங்களும்
வந்திருக்கிறார்கள் நம்ம படத்தைப் பார்க்க என்று.

படத்தின் தொடக்கத்தில் எழுத்தில் ஏதேதோ போட்டார்கள். அதை
வாசித்து முடிப்பதற்குள் அவை மறைந்து விட்டன.

படத்தின் பெயரோட்டத்தில் கறுப்பு வெள்ளை நிறத்தில் மற்றய
சுதந்திர போராட்டங்கள் காட்டப்படுகிறது. சே, பிடல் காஸ்றோ, மற்றும்
நெல்சன் மண்டேலா என்று எல்லாறையும் காட்டுகிறார்கள். மகாத்மா காந்தியைக்
காட்டியதாக ஞாபகம் இல்லை.

படம் தொடங்கவும் எனது இருமருங்கிலும் அமர்ந்திருந்த வெள்ளையர்கள்
எழும்பிப் போனார்கள். அவர்கள் படம் மாறி வந்து உட்கார்ந்து விட்டார்கள்.
ஆங்கில/ஃபிரென்ஞ்சு subtitle கொடுத்திருந்தால் இருந்திருப்பார்களோ என்னமோ
தெரியாது.

படத்தின் தொடக்கத்திலேயே கோர தாண்டவத்தைக் காட்டுகிறார்கள். இதை
இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்துக் காட்டி இருக்கலாம். ஆனால், தொடங்கிய
விதம் சரியாகத் தான் இருந்தது.

இராணுவத்தால் மக்கள் படும் பல துன்பங்களை கதையோடு சொல்லி
இருக்கிறார் இயக்குனர். புலிகளின் நிதர்சனம் வீடியோ பிரதியில் வருவது போல்
அகோரமான காட்சிகளைக் காட்டாமலேயே உண்மையை உணர்த்தி இருக்கிறார்.

என்னைத் தொட்ட கட்டம்:
கதாநாயகனையும் [தமிழீழத் தமிழன்], கதாநாயகியையும் [இந்தியத் தமிழிச்சி]
இலங்கை இராணுவம் செம அடி அடித்து விட்டுச் செல்லும். காயங்களுடன்
இருக்கும் மதுமிதாவைப் பார்த்து, நந்தா சொல்வார் “Welcome to
Jaffna”.

இந்தப் படம் இந்திய மக்களுக்காகவே எடுக்கப்பட்டதாகத் தான்
உணர்கிறேன். மதுமிதாவை கேட்கும் கேள்விகளில் அது வெளிச்சம். நந்தாவின்
மதுமிதா மீதான கோபமான் கேள்விகள் அடிமேல் அடி அடித்து இனித் துன்பம்
வலிக்காது என்று போன மக்களின் கோபக் கனல்களாக தெறிக்கிறது. படு
துன்பத்தில் வருமே ஒரு கோபம் அப்படி.

அது மட்டுமல்லாமல், ஒரு கட்டத்தில் நந்தா கப்பலோடு இறந்து
போனவர்களை பார்த்துவிட்டு படம் பார்க்கிறவர்களை பார்த்து கேள்வி கேட்பார்.
“குழந்தைகள் தத்தளிக்கும்போது காப்பாற்ற வேண்டும் என்று உனக்குத்
தோன்றவில்லையா?” இது இந்திய கடலில் தத்தளித்து இறந்த தமிழர்களை வேடிக்கை
பார்த்த இந்தியாவிற்காக. கடைசியாக அக் கேள்விகள் கடவுளுக்கு
கேட்கப்படுவதாக முடிப்பார்.

மக்களின் இடப்பெயர்வை நிஜமாக காட்டி இருக்கிறார். ஆனால் ஏதோ ஒரு
தொடங்கு கோட்டிலிருந்து நடக்க ஆரம்பிப்பது போல் முன்னுக்கு செல்பவர்கள்
ஒரு நேர் வரிசையில் செல்கிறார்கள். இதை மட்டும் கன்னத்தில் முத்தமிட்டாள்
படத்தில் இடப்பெயர்வை காட்டியது போல் இடையிலிருந்து காட்டி இருக்கலாம்.
எல்லோரும் தொப்பியும் போட்டிருந்தார்கள். எனக்கு அப்படி ஞாபகம்
இல்லை.

படம் முடிந்த பின் பெயரோட்டம் போடும்போது முழுக்க முழுக்க
தமிழிலேயே போடப்படுவது தமிழீழ பாணியை கையாண்டிருப்பதைக் காட்டுகிறது.
ஆனால், ஒரு இடத்தில் நந்தா ஆவேசப் பட்டுப் மக்கள் முன்னிலையில் பேசுவார்.
அதில் அவர் முழுமையான வசனங்களில் சுத்தத் தமிழில் பேசுவார். இப்படி யாரும்
அங்கு பேசுவதாக எனக்கு ஞாபகம் இல்லை.

இந்தப் படத்தை இன்னுமொரு விதமாக, உவமையாக மறைந்திருக்கும்
கருத்தாகவும் பார்க்கிறேன். மதுமிதா முதல் தடவை யாழ்ப்பாணம் வரும்போது,
தமிழ் மக்களை சரியாகப் புரிந்து கொள்ளாதவ. மீண்டும் இந்தியா சென்று பல
காலங்களுக்குப் பின் திரும்பவும் யாழ் வருகிறா. நந்தா சொல்வார், இன்னும்
கடவுள் என்னை உயிரோடு வைத்திருப்பது நீயும் நானும் பிரியக்கூடாது
என்பதற்காகத் தான் என்னவோ. விளங்குதா இலை மறை காயாக இருப்பது?

சரி, மதுமிதா நன்றாகவே செய்திருக்கிறார். நந்தாவும் நன்றாகத்
தான் செய்திருக்கிறார். கோபப்படும்போது மக்களின் குமுறல்களை
வெளிக்கொணர்ந்து இருக்கிறார். இருந்தாலும் ஒரு தமிழராக இல்லாமல் [தெலுங்கு
காறி] இந்தப் படம் இந்தியாவில் தடை செய்யப்படலாம் என்று தெரிந்தும்
சம்பளம் ஏதும் பேரம் பேசாமல் நடித்து இருக்கிறாரே. அதற்காகவே அவருக்கு
நன்றி சொல்லலாம். நந்தா தானாகவே முன்வந்ததற்காக அவருக்கும் ஒரு
நன்றி.

இசை மிக அருமை

இயக்குனருடனான நேர்காணலை இங்கே பார்க்கலாம்: ஆணிவேர் –
ஜான்

சேர்க்கப்பட்டது I: 2006/10/17 @ 8:48 PM [GMT
-5]
தொப்புழ் கொடி உறவை சுட்டிக்காட்டவோ என்னவோ தமிழ் நாட்டிலிருந்து வருபவர்
பெண்ணாக கதை உருவாக்கப்பட்டுள்ளது.

Movie Review and Tamil Movie28 Aug 2006 01:56 pm

பார்த்துவிட்டேன்.

தமிழ் படம் பார்க்க என்று போகிறவர்களுக்கு சற்று ஏமாற்றமாகத் தான் இருக்கும்.

ஒற்றை வரியில் சொல்வதென்றால், இது ஒரு மர்மம் கலந்த கதை. என்னும் சொல்லலாம், சொன்னால் மர்மம் இல்லாமல் போய்விடும்.

ஒரு ஆங்கில பட விதத்தில் எடுத்து இருக்கிறார்கள். மர்மக் கதை தமிழ் சினிமாவில் பல காலம் கழித்து. நான் படத்திற்கு போகும்போதே இரண்டு பட விமர்சனம் வாசித்தேன். ஒருவர் மிக நன்றென்றார், மற்றவர் அவ்வளவு திறம் இல்லை என்றார். முன்னவர் வெளிநாட்டுக்காரர், பின்னவர் இந்தியாவில் வசிப்பவர். அப்போதே விளங்கி விட்டது, இது தமிழ் சினிமா பாணி அல்ல என்று.

ஆங்கிலம் அதிகமாகவே பேசப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால், ஆங்கில படங்களில் வருமே ஒரு கெட்ட வார்த்தை அடிக்கடி. தமிழ் படத்தில் இதில் தான் நான் முதன் முதலில் கேட்கிறேன். இடங்களின் பெயர் என்று எழுத்துக்களில் போடும்போது எல்லாம் ஆங்கிலத்திலேயே போடுகிறார்கள். நான் நினைக்கிறேன் இது பல மொழிகளில் மொழி மாற்றம் செய்ய வேண்டும் என்று சிந்தித்து இப்படி செய்திருக்கிறார்கள் என்று. கொடுமை என்னவென்றால், ஆங்கிலம் கதைக்கும்போது எழுத்துக்களாக தமிழில் போடுகிறார்கள். ஐயா அது தமிழா என்று பார்த்து யாராச்சும் சொல்லுங்கோ. சென்னைத் தமிழோ?! ஆங்கில பாடல்களில் வருவதுபோல் கறுப்பிகளின் ஆட்டமும் இருக்குங்கோ 😉 இது வெளிநாட்டுக்காரர்களுக்கு என்றே எடுக்கப்பட்டது போல் இருக்கு.

கமல்காஸனின் படம் எதாவது வித்தியாசமாக மனுசன் செஞ்சிருப்பார் என்று எதிர்பார்ப்போடும் போகாதீர்கள். கமல்காஸனைப் பிடிக்காதவர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சி. ஆனால் கமலுக்கே பிடித்த ஒரு பாத்திரமும் இருக்கு (மனநொயாளி[கள்])

சரி படத்தின் முதல் பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்தது. அந்த மாதிரி இருந்தது. தமிழ் சினிமாவில் பாதாளத்தில் இருக்கும் காவல்துறையை தூக்கி நிமிர்த்திக் காட்டுகிறேன் என்று தான் கௌதம் ஒரு முடிவோடு இருக்கிறார் போலும். தமிழ் சினிமாவின் துப்பாக்கி சூட்டு சண்டைக்கும் அமெரிக்க சினிமாவின் துப்பாக்கி சூட்டுச் சண்டைக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இவ்வளவு காலமும் இருந்தது. கௌதம் சரி செய்து விட்டார். சகல பாடல்களும் ரசிக்கத்தக்கவை. இடையில் ஒரு குத்தாட்டம் போல் ஒரு பாடல் வரும். இனிமை தான் இருந்தாலும் கதைக்கு தேவையில்லை என்பது எனது எண்ணம்.

ஊடலில் கமலைப் பற்றி சொல்லவா வேண்டும். மனைவியை அறிமுகப் படுத்தும்போது மனைவி சொல்வார் “இவர் சாப்பாட்டில் மட்டும் தான் வீக் …”. ஐயோ…, கயல்விழி [கமலின் மனைவியாக வருபவர்], கொல்லுராங்க 😉

_____
CAPital

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.