- ஒரு வறிய குடும்பத்தில் தந்தைக்காக எடுக்கப்பட்டது சேரனின் தவமாய் தவமிருந்து.
- ஒரு நடுத்தர குடும்பத்தில் தந்தைக்காக எடுக்கப்பட்டது கௌதமின் வாரணம் ஆயிரம்.
இது தான் படம். தவமாய் தவமிருந்து போலவே மிக நீளமான, மிகவும் குறைந்த வேகத்தில் நகரும் படம்.
எனக்கு இந்தப் படம் கொஞ்சம் யதார்த்தம் குறைந்ததாகவே காணப்படுகிறது. நடுத்தர குடும்பத்து தந்தை தனது ஒரே மகனை, ஒரு பெண் பிள்ளையையும் வைத்திருப்பவர், பணம் செலவழித்து இந்தியாவில் இருந்து அமெரிக்கா அனுப்புவாரா மகனின் காதலியைக் கண்டுபிடிக்க? எந்த வித யோசனையும், எதிர்ப்பும் இல்லாமல் ஒரு தந்தை அனுப்புகிறார் என்பது யதார்த்தத்திற்கு ஒத்துவராதது போல் தோன்றுகிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்கா போக ஏற்படும் விமானச் சீட்டின் செலவே அதிகம், பத்தாததற்கு அமெரிக்காவில் 90 நாட்கள் இருக்கிறாராம். சில வேளை கௌதமின் தந்தை அப்படி அனுப்பினாரோ எனக்குத் தெரியாது.
ஆனால், வேறு எந்த கதாநாயகனுக்கும் கிடைக்காத வாய்ப்பு சூரியாவிற்கு என்று சொல்லுவேன். இந்தப் படத்தில் பல வித கெட்டப்பில் சூரியா வலம் வருகிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் சூரியா வித்தியாசமாகத் தெரிகிறார். அவரின் அழகுத் தோற்றம் ஒவ்வொரு வேசத்திற்குமே அழகாகத் தான் இருக்கிறது. ஒன்றுகூட இரசிக்க முடியாமலில்லை. நான் நினைக்கிறேன், கமல் ஹாசனுக்குப் பிறகு பல வித கெட்டப்புகள் அழகாகப் பொருந்திய ஆள் சூரியா என்று சொல்லலாம்.
தந்தையாக வரும் சூரியா நடிப்பில் முதிர்ந்து தெரிகிறார். வேறுபடுத்திக் காட்டியதால், நான் முதலில் வேறு யாரோ என்று எண்ணிவிட்டேன். ஒப்பனை நன்றாகவே செய்திருக்கிறார்கள் படம் முழுக்க.
பாடல்கள் எல்லாம் இரசிக்கக் கூடியதாகவே இருக்கிறது. ஜோக்கிற்கு என்று யாரும் தனியாக இல்லை. சூரியாவே செய்கிறார். ஆனால், ஜோக் அதிகமாக இல்லை என்ற ஏக்கம் வரவில்லை.
மகன் திருமணம் செய்து பிள்ளை உண்டு என்று காட்டுகிறார்கள், ஆனால், மகள் அப்படியே இருக்கிறா.
எனக்கு என்னமோ சேரனின் தவமாய் தவமிருந்து படம் அளவிற்கு இது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தவமாய் தவமிருந்து படத்தில், தந்தை வல்லவர், சூரர், நல்லவர் என்று சொல்லி சொல்லி கதை நகரவில்லை. யதார்த்தமாக நகர்ந்து தந்தையின் கதாபாத்திரத்தை உணர்த்தி நிற்கிறது. வாரணம் ஆயிரம் படத்தில் தந்தையைப் புகழ்ந்தே கதை நகர்கிறது. இன்னும் சொல்லப் போனால், மகனின் கதையே!