The cyanide story
குப்பி ‍
The cyanide story

இந்திய பிரதமருக்காக போட்டியிட்ட ராஜீவ் காந்தி தற்கொலைப் போராளியால் கொலைசெய்யப்பட்ட நேரத்தில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ஒரு கன்னட இளைஞன் இயக்கிய படம் இது.

இந்திய ஆக்கிரமிப்பின் தாக்கத்தை நான் நேரடியாக உணர்ந்தவன் என்ற ரீதியில், எனக்கு இந்தப் படம் முழுக்க மனம் கனமாகவே இருந்தது. ஆத‌லால் சிவ‌ராச‌ன், சுபா அவ‌ர்க‌ளின் மேல் அனுதாபம் ஏற்ப‌ட்ட‌தே ஒளிய‌ கோபம் அல்ல. இது பாதிக்கப்பட்டவன் என்ற ரீதியில் எனது பார்வை. இந்தியத் தமிழனுக்கு இவை எரிச்சலை உண்டுபண்ணினால், மன்னித்துக்கொள்ளுங்கள்.

சிவராசன் எவ்வ‌ள‌வு முக்கிய‌மான‌வ‌ர் என்ப‌தை அவரை அறிமுகப்படுத்தும் வித‌த்தில் இய‌க்குன‌ர் உண‌ர்த்துகிறார்.

என்ன‌ தான் ப‌த்திரிகைக‌ளிலும் தொலைக்காட்சிக‌ளிலும் அறிந்துகொண்டாலும், குப்பி ஐப் பார்க்கும்போது அவ‌ர்க‌ள் எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌ட்டார்க‌ள் என்ப‌தை உண‌ர‌ முடிகிற‌து. அடிக்கடி வீட்டை மாற்றும் அவஸ்தை; ஒவ்வொரு க‌த‌வுத் த‌ட்ட‌லிலும் க‌வ‌ன‌மாக‌ இருக்கும் வித‌ம்; மாறி மாறி காவ‌ல் காக்கும் முறை; க‌ழிவுக்கூடம் [toilet] போவ‌திலும் ஒரு எச்ச‌ரிக்கை; நாள் முழுவ‌தும் வீட்டை விட்டு வெளியேறாம‌ல் இருத்த‌ல் என்ப‌தெல்லாம் அவ‌ர்க‌ள் எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌ட்டார்க‌ள் என்ப‌தை உண‌ர்த்தும்போது ம‌ன‌ம் க‌ன‌க்கிற‌து.

ஆனால், இவ்வ‌ள‌வு ப‌ய‌த்திலும் அவ‌ர்க‌ள் சந்தோச‌மாக‌ இருக்கிறார்க‌ள் என்ப‌து போராளிக‌ளை அறியாத‌வ‌ர்க‌ளுக்கு நம்பமுடியாத விய‌ப்பாக‌வே இருக்கும். போராளி என்ப‌து ஏதோ ஒரு தொழில் அல்ல. இத்தனை மணியிலிருந்து இத்தனை மணி வரை போராளி பிறகு வேறு ஏதாவது செய்வது என்றல்ல. அது ஒரு வாழ்க்கை. ப‌கிடி [joke] விடுவ‌து, ச‌ந்தோச‌மாக‌ இருப்ப‌து, போராடுவ‌து எல்லாம் ஒன்றிப்பிணைந்த‌தே போராளி. ச‌க‌ போராளி உன‌து ந‌ண்ப‌ன்.

வீடு வாட‌கைக்கு விடும் முக‌வ‌ர், ஜெக‌ன்நாத், ந‌ன்றாக‌ ந‌டித்திருக்கிறார். சிவராசனாக நடித்தவர் மனதில் நிற்கிறார். அட‌ ந‌டிப்பு என்றால் இந்த‌ப் ப‌ட‌த்தில் ஜெக‌ன்நாத்தின் ம‌னைவிக்குத் தான் ப‌ரிசு கொடுக்க‌ வேண்டும். மிக‌ அற்புத‌மாக‌ ந‌டித்திருக்கிறார். இய‌க்குன‌ர் அவ‌ ஊடாக‌ சிரிப்பை இடையிடையே புகுத்தியிருக்கிறார். முழு நீள‌ சோக‌மாக‌ இல்லாம‌ல் கையாண்ட‌ இய‌க்குன‌ருக்கு ஒரு பாராட்டு சொல்ல‌லாம்.

இவ‌ர்க‌ளை விட‌ வேறு சில‌ போராளிக‌ளையும் காட்டுகிறார்க‌ள். அவ‌ர்க‌ள் காய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாக‌க் காட்டுகிறார்க‌ள். எப்ப‌டிக் காய‌ப்ப‌ட்டார்க‌ள் என்ப‌து காட்ட‌ப்ப‌ட‌வில்லை; என‌க்கும் தெரிய‌வில்லை.

படத்தில் புலி, LTTE, இலங்கை என்று எந்தச் சொற்பிரயோகமும் உபயோகிக்கப்படவில்லை. என்ன இருந்தாலும் இது இந்தியத் திரைப்படம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

படத்தின் முடிவில் ஆயுதம் ஏந்தியவர்களை ஆயுதமே கொன்றுவிட்டது என்று குறிப்பிட்டார்கள். எனக்கு உடனே மகாத்மா காந்தி தான் ஞாபகத்திற்கு வந்தார். அவரும் ஆயுதத்தாலே தானே மாண்டார். காவல்துறையும், இராணுவமும் ஆயுதம் ஏந்தித் தானே இருக்கிறது. ஆயுதம் எதற்காக ஏந்தப்படுகிறது என்னும் காரணத்தை புரிந்துகொள்வார்களாக.

தமிழீழத் தமிழன் என்ற முறையில் எங்களுக்காக, நாட்டுக்காக, ஒரு இலட்சியத்துடன், இவ்வளவு கஷ்டப்பட்டு பிடிகொடாமல் இறுதியில் தங்களையே மாய்த்துகொண்டார்கள் என்று உணரும்போது மனதில் கனத்தை நிச்சயமாக்குகிறது. சிவராசன், தற்சமயம் தான் குப்பி கடித்தும் மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டால் என்ற சந்தேகத்தில் குப்பி கடிப்பது மட்டுமின்றி தன்னைத் தானே சுட்டுக்கொள்கிறார். அது அவரின் இலட்சிய வேட்கையை வெளிக்காட்டுகிறது. எனது தாயும் படம் பார்க்க வந்திருந்தார். அவர் அழுதே விட்டார். கொஞ்சம் தவறி இருந்தால் அவ இந்திய இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருந்திருப்பார்.