விடுமுறைக்கு Toronto சென்று மீண்டும் Montreal வரும்போது, தமிழ் பேரூந்தில் இந்தப் படத்தைப் போடுங்கோ என்று எனது குறுந்தட்டைக் கொடுத்தேன்.

ஈழப் படம் போல் இருக்கே என்று கொஞ்சம் ஆவலாக பார்க்கத் தொடங்கினேன். நான் இதற்கு முன் இந்தப் படம் பற்றிக் கேள்விப்படவே இல்லை.

முதல் காட்சியிலேயே அவர் கதைக்கும் ஆங்கிலத்தை வைத்து லண்டனில் இருந்து வருபவர் என்று அறிந்துகொண்டேன். அவர் கதைக்கும் தமிழ் சற்று வித்தியாசமாக இருந்தது. தமிழின் ஒவ்வொரு சொல்லையும் அழுத்தி முடிக்க மாட்டார். ஏதோ சிங்களவன் (அ) மலை நாட்டுத் தமிழர்கள் தமிழ் பேசுவது போல் இருந்தது. சரி லண்டனில் இருந்தவர் தமிழை மறந்திட்டார் என்று யோசித்துக்கொண்டேன்.

படத்தின் முன்கதை [flashback] மிக நீளமாக இருந்தது. காட்சியமைப்பு மிகவும் நன்று.

சரி விசயத்திற்கு வருவம். படத்தில், பாடசாலைக்குச் செல்லும் வளியில், இளைஞன் ஒருவனைக் கூட்டிச்செல்ல சக இளைஞனர்களும், யுவதிகளும் துவிச்சக்கர வண்டிகளில் [bicycle] வருவார்கள். அவர்களுக்குள் கதைக்கும் ஆபாச வசனங்கள் காது கூச வைக்கிறது. உண்மையில் வன்னியில் கதைத்திருக்கலாம். அதாவது, ஆண்கள் குழுமமாக இருந்திருந்தால் கதைத்திருக்கலாம். அதே போல் பெண்கள் மட்டும் இருந்திருந்தாலும் கதைத்திருக்கலாம். ஆனால், இருபாலாரும் சேர்ந்து இவ்வளவு ஆபாச பேச்சு நம்பும்படியாக இல்லை.

அதில் தொடங்கிய ஆபாசப் பேச்சு படம் முழுக்க தொடர்கிறது. ஏனடா இந்தப் படத்தைப் போடச்சொல்லி சாரதியிடம் கொடுத்தேன் என்று எனக்கு இருந்தது. பாடசாலையில் ஆசிரியையும் ஆபாச பேச்சுத் தான். அது ஒரு ஆண் ஆசிரியர் கதைத்ததாக இருந்திருந்தாலும் நம்பி இருக்கலாம்.

ஊரில், பெண்களுடன் சேர்ந்து ஒரு group project செய்வதற்கே மிகக் கடினம். ஆண்கள் வேறாக, பெண்கள் வேறாகத் தான் பிரித்து விடுவார்கள். இதில் இவ்வளவு ஆபாச பேச்சுக்கள் பெண்களே கதைப்பதாகக் காட்டியிருப்பது ஏன் என்று புரியவில்லை. அட அதைக் கூட நாசூக்காகச் சொன்னால் கூட பறுவாயில்லை. பச்சை பச்சையாக எல்லா இயக்குனர் சொல்ல வைத்திருக்கிறார்.

மற்றது, அடிக்கடி “தோட்டக்காட்டு…” என்று சொல்லித் தான் மலைய தமிழர் குடும்பத்தை பேசுகிறார்கள், முதலாளிகள். தொழிலாளியை, முதலாளி மதிப்புக்குறைவாக நடத்துவது ஒன்றும் புதிதான விடயமல்ல. எல்லா இடத்திலும் கூலித் தொழிலாளிகளைக் கேவலாமகத் தான் நடத்தினார்கள். ஆனால், “தோட்டக்காடு” என்பது ஏதோ ஒரு சாதி போல் அதைச் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறார் இயக்குனர். சில நேரத்தில் மலையகத்தில் அவ்வாறு இருந்திருக்குமோ தெரியவில்லை. ஊரில், குறைந்த சாதிக் காரர்களை ஒரு போதும் சாதி சொல்லிக் கூப்பிடுவதில்லை. அவர்களுடைய பெயரைச் சொல்லியோ, அல்லது செல்லப் பெயரைச் சொல்லியோ கூப்பிடுவார்கள். தங்களுக்குள் கதைத்துக்கொள்ளும் போது தான் சாதி சொல்வார்கள்.

இந்திய திரையில் வரும் வில்லன்கள் போல், மச்சி நீ அவளை “முடிச்சிட்டு” எனக்குத் தா என்று இளைஞர்களைக் கதைக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

ஈழக் கலைஞர்கள் அவ்வளவு பேரும் ஏதோ மலையக (அ) சிங்கள தமிழர்கள் தமிழ் கதைத்தது போல் பேசுகிறார்கள். உ+ம்: “ஏன்” என்று உச்சரிக்காமல்” “ஏ[ன்]”… என்று அழுத்தம் குறைவாகவே உச்சரிக்கிறார்கள். வன்னித் தமிழ் இவ்வளவு திரிபடைந்த‌தா என்று தெரியவில்லை.

சரி, எல்லாவற்றிற்கும் ஒரு மணிமுடி வைத்தது போல், தென்னந்த் தோப்பில் ஒரு BBQ Party. கோழி பொரிச்சு கிழவிமார்கள் டிஸ்கோ டான்ஸ்! யுவதிகள் போட்டிருக்கும் உடையென்ன, அவர்கள் ஆடும் ஆட்டம், வயது போனவர்கள் கூட டிஸ்கோ டான்ஸ் ஆடுகிறார்கள், அதுவும் துணை மாற்றி! கன்றாவி! இய‌க்குன‌ர் அவ‌ர்க‌ள் எல்லோரும் ல‌ண்ட‌னில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள் என்று காட்டியிருந்தாலும் த‌ப்பி இருப்பார்.

வ‌ன்னி, க‌ன‌க‌ராய‌ன் குழ‌ம் புலிக‌ளின் க‌ட்டுப் பாட்டுப் ப‌குதி போல் தெரிய‌வில்லை. ஏனெனில், இல‌ங்கை காவ‌ல்துறை ஒரு விசார‌ணைக்காக‌ வ‌ருகிறது. வந்து, இந்திய சினிமாவில் லஞ்சம் வாங்குவது போல் இங்கேயும் வாங்கிச் செல்கிறது. இறுதியில், இராணுவ‌ க‌ட்டுப்பாட்டுப் ப‌குதியில் ஒரு இளைஞ‌ன் கையில் துப்பாக்கி எப்ப‌டி என்றும் தெரிய‌வில்லை. இய‌க்க‌ம் வ‌ருவ‌தாக‌ ஒரு க‌ட்ட‌ம். ஆகா, சிங்களத் திரைப் படத் தாக்கம்.

படத்தில், இந்திய/ சிங்கள திரைப் படத் தாக்கம் அதிகமாகவே தென்படுகிறது.

வன்னி, கனகராயன் குழத்தில் வசித்தவர்கள் ஏதாவது சொன்னால் தான் தெரியும், உண்மையில் இப்படியான சமூகம் இருந்ததா இல்லையா என்று. யாராச்சும் அப்படி இருந்து இந்தப் படத்தைப் பார்த்தால் இங்கே உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.