ஆணிவேர்

எனது வரிசையின் இருமருங்கிலும் வெள்ளைக்காரங்கள் உட்கார்ந்து
இருந்தார்கள். எனக்கு ஆச்சரியமாகக் கூட இருந்தது. அட வெள்ளைக்காரங்களும்
வந்திருக்கிறார்கள் நம்ம படத்தைப் பார்க்க என்று.

படத்தின் தொடக்கத்தில் எழுத்தில் ஏதேதோ போட்டார்கள். அதை
வாசித்து முடிப்பதற்குள் அவை மறைந்து விட்டன.

படத்தின் பெயரோட்டத்தில் கறுப்பு வெள்ளை நிறத்தில் மற்றய
சுதந்திர போராட்டங்கள் காட்டப்படுகிறது. சே, பிடல் காஸ்றோ, மற்றும்
நெல்சன் மண்டேலா என்று எல்லாறையும் காட்டுகிறார்கள். மகாத்மா காந்தியைக்
காட்டியதாக ஞாபகம் இல்லை.

படம் தொடங்கவும் எனது இருமருங்கிலும் அமர்ந்திருந்த வெள்ளையர்கள்
எழும்பிப் போனார்கள். அவர்கள் படம் மாறி வந்து உட்கார்ந்து விட்டார்கள்.
ஆங்கில/ஃபிரென்ஞ்சு subtitle கொடுத்திருந்தால் இருந்திருப்பார்களோ என்னமோ
தெரியாது.

படத்தின் தொடக்கத்திலேயே கோர தாண்டவத்தைக் காட்டுகிறார்கள். இதை
இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்துக் காட்டி இருக்கலாம். ஆனால், தொடங்கிய
விதம் சரியாகத் தான் இருந்தது.

இராணுவத்தால் மக்கள் படும் பல துன்பங்களை கதையோடு சொல்லி
இருக்கிறார் இயக்குனர். புலிகளின் நிதர்சனம் வீடியோ பிரதியில் வருவது போல்
அகோரமான காட்சிகளைக் காட்டாமலேயே உண்மையை உணர்த்தி இருக்கிறார்.

என்னைத் தொட்ட கட்டம்:
கதாநாயகனையும் [தமிழீழத் தமிழன்], கதாநாயகியையும் [இந்தியத் தமிழிச்சி]
இலங்கை இராணுவம் செம அடி அடித்து விட்டுச் செல்லும். காயங்களுடன்
இருக்கும் மதுமிதாவைப் பார்த்து, நந்தா சொல்வார் “Welcome to
Jaffna”.

இந்தப் படம் இந்திய மக்களுக்காகவே எடுக்கப்பட்டதாகத் தான்
உணர்கிறேன். மதுமிதாவை கேட்கும் கேள்விகளில் அது வெளிச்சம். நந்தாவின்
மதுமிதா மீதான கோபமான் கேள்விகள் அடிமேல் அடி அடித்து இனித் துன்பம்
வலிக்காது என்று போன மக்களின் கோபக் கனல்களாக தெறிக்கிறது. படு
துன்பத்தில் வருமே ஒரு கோபம் அப்படி.

அது மட்டுமல்லாமல், ஒரு கட்டத்தில் நந்தா கப்பலோடு இறந்து
போனவர்களை பார்த்துவிட்டு படம் பார்க்கிறவர்களை பார்த்து கேள்வி கேட்பார்.
“குழந்தைகள் தத்தளிக்கும்போது காப்பாற்ற வேண்டும் என்று உனக்குத்
தோன்றவில்லையா?” இது இந்திய கடலில் தத்தளித்து இறந்த தமிழர்களை வேடிக்கை
பார்த்த இந்தியாவிற்காக. கடைசியாக அக் கேள்விகள் கடவுளுக்கு
கேட்கப்படுவதாக முடிப்பார்.

மக்களின் இடப்பெயர்வை நிஜமாக காட்டி இருக்கிறார். ஆனால் ஏதோ ஒரு
தொடங்கு கோட்டிலிருந்து நடக்க ஆரம்பிப்பது போல் முன்னுக்கு செல்பவர்கள்
ஒரு நேர் வரிசையில் செல்கிறார்கள். இதை மட்டும் கன்னத்தில் முத்தமிட்டாள்
படத்தில் இடப்பெயர்வை காட்டியது போல் இடையிலிருந்து காட்டி இருக்கலாம்.
எல்லோரும் தொப்பியும் போட்டிருந்தார்கள். எனக்கு அப்படி ஞாபகம்
இல்லை.

படம் முடிந்த பின் பெயரோட்டம் போடும்போது முழுக்க முழுக்க
தமிழிலேயே போடப்படுவது தமிழீழ பாணியை கையாண்டிருப்பதைக் காட்டுகிறது.
ஆனால், ஒரு இடத்தில் நந்தா ஆவேசப் பட்டுப் மக்கள் முன்னிலையில் பேசுவார்.
அதில் அவர் முழுமையான வசனங்களில் சுத்தத் தமிழில் பேசுவார். இப்படி யாரும்
அங்கு பேசுவதாக எனக்கு ஞாபகம் இல்லை.

இந்தப் படத்தை இன்னுமொரு விதமாக, உவமையாக மறைந்திருக்கும்
கருத்தாகவும் பார்க்கிறேன். மதுமிதா முதல் தடவை யாழ்ப்பாணம் வரும்போது,
தமிழ் மக்களை சரியாகப் புரிந்து கொள்ளாதவ. மீண்டும் இந்தியா சென்று பல
காலங்களுக்குப் பின் திரும்பவும் யாழ் வருகிறா. நந்தா சொல்வார், இன்னும்
கடவுள் என்னை உயிரோடு வைத்திருப்பது நீயும் நானும் பிரியக்கூடாது
என்பதற்காகத் தான் என்னவோ. விளங்குதா இலை மறை காயாக இருப்பது?

சரி, மதுமிதா நன்றாகவே செய்திருக்கிறார். நந்தாவும் நன்றாகத்
தான் செய்திருக்கிறார். கோபப்படும்போது மக்களின் குமுறல்களை
வெளிக்கொணர்ந்து இருக்கிறார். இருந்தாலும் ஒரு தமிழராக இல்லாமல் [தெலுங்கு
காறி] இந்தப் படம் இந்தியாவில் தடை செய்யப்படலாம் என்று தெரிந்தும்
சம்பளம் ஏதும் பேரம் பேசாமல் நடித்து இருக்கிறாரே. அதற்காகவே அவருக்கு
நன்றி சொல்லலாம். நந்தா தானாகவே முன்வந்ததற்காக அவருக்கும் ஒரு
நன்றி.

இசை மிக அருமை

இயக்குனருடனான நேர்காணலை இங்கே பார்க்கலாம்: ஆணிவேர் –
ஜான்

சேர்க்கப்பட்டது I: 2006/10/17 @ 8:48 PM [GMT
-5]
தொப்புழ் கொடி உறவை சுட்டிக்காட்டவோ என்னவோ தமிழ் நாட்டிலிருந்து வருபவர்
பெண்ணாக கதை உருவாக்கப்பட்டுள்ளது.