October 2006
Monthly Archive
வல்லவன்
சரியான கூட்டம். வேட்டையாடு விளையாடுவிற்கு வந்த மாதிரி சனம்.
தொடக்கத்திலேயே “தலைவன்” என்று புகழ்ந்து தான் சிம்புவை அறிமுகப்படுத்துகிறார்கள். அப்போதே விளங்கிவிட்டது இது மன்மதன் மாதிரி தற்புகழ்ச்சி இல்லாத படம் இல்லை என்று.
மன்மதன் தவிர்ந்த மற்றய படங்கள் மாதிரி இல்லாமல் வசனங்களை சற்றுக் குறைத்திருக்கிறார். ஆனாலும் வசனங்களும், ஸ்டைலும் அதிகம் தான். அவருக்கு குறைவு, நமக்கு அதிகமுங்க.
பாடல், இசை, ஒளியமைப்பு அற்புதம்! நகைச்சுவை இரசிக்கலாம்.
இருந்தாலும், தனுசைக் குறிவைத்தே முழுவதும் இருக்கிறது. வயது கூடிய பெண்ணை திருமணம் செய்வது, முதல் காதலி தன் காதலை புரிந்து கொள்ளவில்லை, அம்பானி பொண்ணை கலியாணம் கட்டி பெரியாள வர நீ ஆசைப்படுறாய் ஆனா நான் அம்பாணீயாவே வர ஆசைப்படுறன், காதல் தோல்வி என்றால் நான் காவல் நிலையம் கோர்ட் என்று போக மாட்டேன் [தனுசின் "தேவதையைக் கண்டேன்"], இப்படி போகுதுங்க.
இது ஏதோ, தனுசிடம் தோற்றுவிட்டேன் என்று கோபமாக அவரை வையிறது மாதிரி இருக்கிறது. தனுஸ் இதுவரைக்கும் சிம்புவிற்கு எதிராக எந்தப் படத்திலும் செய்தது இல்லை. அவர் அப்படி செய்யாமல் இருக்குமட்டும் சிம்பு தோற்றதாகவே உணருவார் என்பது என் எண்ணம்.
என்னமோ சிம்புவின் தற்புகழ்ச்சிக்கு படத்தில் குறைவேயில்லை. இதை ஆணவமாகத் தான் நான் பார்க்கிறேன்.
எனக்கோ இடைவேளை வரமுன்பே எப்போ படம் முடியும் என்றாகிவிட்டது.
இருந்தாலும், இளவட்டங்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை. தனக்கென்றொரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிவிட்டார். அதனால், இனி சிம்பு தோற்பார் என்பது ஐயமே.
எனக்குப் பிடித்த கட்டம்:
சிம்புவிற்கும் நயந்தாராவிற்கும், திருமணமாக முன்பே உடலுறவு முடிந்து விடும். கமல் படங்களில் வருவது போல் ஒரு காட்சி. முடிந்த பின் நயந்தாரா அழுவார் “நான் தப்பு செய்துவிட்டேன்”. சிம்பு சொல்வார் “எல்லாப் பொண்ணுகளும் முடிஞ்சதுக்கப்புறம் இதைத் தான் சொல்லுறாங்க”. திரையரங்கில் விசில் கூரையைப் பிய்த்தது!
ஹுரே ஹுரே பாடலில் ஆங்கில பாடல் காட்சியமைப்பில் rap செய்வது போல் செய்திருக்கிறார். அதில் சிம்பு தமிழ் நடிகர்களில் எல்லாரையும் மிஞ்சிவிட்டார். இதனால், வெளிநாடுவாள் தமிழ் இளவட்டங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
ரீமா சென் தன் நடிப்புத்திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இருந்தாலும் சற்று அகோரமாக எந்த மேக்கப்பும் இல்லாமல் அவரை பள்ளி மாணவியாக வலம்வர வைத்தது அசிங்கமாக இருக்கிறது.
ரீமா சென்னுக்கும் சிம்புவிற்கும் காதல் வெளிப்படும் காட்சியில் வசனமே பேசாமல் முகபாவனையில் சிம்பு நன்றாக செய்திருக்கிறார்.
கடைசி 30 நிமிடங்கள் இழுவை. படையப்பாவை re-make செய்திருக்கிறார்.
லாஜிக் பிழைக்கும் கட்டங்கள்:
நயந்தாரா வீட்டில் சிம்பு அறையில் இருக்கும்போது [உடலுறவுக்குப் பின்] நயந்தாராவின் பெற்றோர் வந்துவிடுவார்கள். பிறகு என்ன நடந்தது என்றே காட்டவில்லை.
சந்தியா கடத்தப்பட்டவுடன் சிம்பு அந்த இடத்திற்கு அன்றிரவே போய்விடுவார். எப்படி தகவல் கிடைத்தது?
அளவுகடந்த காதல் வைத்துள்ள சிம்பு ஒரு அடிமைபோல் இருக்கிறார். மறு விநாடியே புயலாக மாறுகிறார். சடாரென்று இப்படி மாற்றம் ஏற்படுமா?
இவற்றைப் பார்க்கையில், மன்மதன் படத்தில் கோபித்துக்கொண்டு போன இயக்குனரின் ஆற்றலால் தான் வெற்றி பெற்றதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
_____
CAPital
வரலாறு [Godfather]
பல நாள் எதிர்பார்த்து இருந்த படம். கே. எஸ். ரவிகுமாரின் படம். super star இக்குச் செய்யப்பட்ட கதை என்று பிரபலமாக பேசப்பட்ட படம்.
இரவு 10:00 மணிக்கு படம் என்று 10:30 இக்குத் தான் போட்டார்கள் இங்கு மொன்றியலில் [கனடா]. இது வழமையாகிவிட்டது. ஆனால், திரை முக்கால்வாசி நிரம்பியே இருந்தது.
இரவு 7:30 show பார்த்துவிட்டு வெளியில் வருபவர்கள், நல்ல படம் என்று சொன்னதைக் கேட்டு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அஜித்தின் சற்று முந்தய படங்கள் அத்தனையும் தோல்வியில் முடிவுற்றிருந்தது. சமீகாலத்தில் தான் சற்று ஏறுமுகமாக இருக்கிறது. இருந்தாலும் இப்போது அஜித் முன்புபோல் நடிப்பை வெளிக்காட்டுகிறார் இல்லை என்பது குற்றமாக இருந்தது.
இவ்வளவு இருந்தாலும் “தல” இன் படத்தைப் பார்க்காமல் விட மனமில்லாமல் போனேன்.
முதல் ஐந்து நிமிடத்திலேயே பாட்டு வந்தது. என்ன ஆச்சரியம், அஜித் நன்றாக நடனமாடுகிறார். ஐயோ நான் பரத நாட்டியத்தைச் சொல்லவில்லை. நிஜமாகவே dance ஆடுகிறார். நடன ஆசிரியர் உண்மையிலேயே அஜித்தை ஆட வைத்திருக்கிறார். இதே நடன ஆசிரியர் தான் “வல்லவன்” பட நடன ஆசிரியரும். அஜித்தின் குறையாக எப்போதுமே இருந்தது அவரின் நடனங்கள் பார்க்க சகிக்க முடியவில்லை என்பது தான். ஆகா எடுத்த உடனையே தல ஆச்சரியத்தைக் கொடுத்துட்டாரே என்று கொஞ்சம் நிம்மதியாக உட்கார்ந்தேன். இந்தப் பாடலைப் பார்த்து அஜித்தின் நடனத்தில் நிறைவு காணவில்லையென்றால், இனி நான் கீழ் சொல்லுவனவற்றை நம்பாதீர்கள்.
அஜித் படத்தில் பின்னி எடுத்திருக்கிறார். ஒவ்வொரு வேடமும் தனித்தனியாக மனதில் நிற்கிறது. எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி என்ற சொல்லுக்கே வாய்ப்பில்லை. தகப்பனாக இருக்கட்டும், பரத நாட்டியக் கலைஞனாக இருக்கட்டும், வில்லனாக இருக்கட்டும் பின்னி எடுக்கிறார். பணக்கார இளைஞனாக வருவது தான் இவர்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருக்கிறது. அட வில்லனாக நடிக்கும்போது மற்றய படங்களில் வில்லன் மேல் எப்படி வெறுப்பு வருமோ அப்படி வருகுதப்பா. உண்மையா.
அட முக்கியமாக ஒன்றைச் சொல்ல மறந்துட்டேன். அஜித் “வாலி” படத்திற்குப் பின் இந்தப் படத்தில் தான் “நடித்திருக்கிறார்”. ஆமாங்க, மனிசன் பல கட்டங்களில் மிக நன்றாக நடித்திருக்கிறார். முக பாவனையோடு நடித்திருக்கிறார்.
இந்தப் படத்திற்காக அஜித்திற்கு ஒரு award கண்டிப்பாக கிடைக்கும். [அட நம்ம சேரன் படம் இந்த வருடம் வெளிவராமல் இருந்தால்].
என்னடா எல்லாத்தையும் சொல்லுறான், அந்த பரத நாட்டியக்காரனைப் பற்றி சொல்லவே இல்லை என்று யோசிக்கிறீங்களா? அட நீங்க வேற அதை சொல்லுறதுக்கு தமிழில் வார்த்தையே கிடைக்கலைங்க [கொஞ்சம் ஓவறு?]. அஜித் மிகவும் பாராட்டத்தகாத அபிநயங்களுடன் நடித்திருக்கிறார். அஜித்தால் இப்படியும் நடிக்க இயலுமா என்ற சந்தேகமே வருகுதப்பா. [இந்தக் கதை உண்மையில் super star இற்குச் செய்யப்பட்டதாக இருந்தால் நம்ம super star எப்படி நடித்திருப்பார் என்று புரியவில்லை]. கமல், விக்ரம் அவங்களோட அஜித்தையும் சேர்க்கலாம் போல இருக்குப்பா. மனிசன் நடக்கேக்க, திரும்பேக்க, சிரிக்கேக்க, ஏன் அழேக்க கூட அபிநயத்தோட கலக்கியிருக்கிறார்.
ஆனால், ஒன்றே ஒன்று Matrix ஆங்கில படம் வந்தாலும் வந்துச்சு, எல்லோரும் துப்பாக்கித் தோட்டாவை தங்கள் மேல் படாமல் சரிந்து தப்ப பழகிக்கொண்டார்கள். இது ஒரே ஒரு கட்டம் தான். மற்றபடி ஓகே.
பாடல்கள் அமர்க்களம்.
முற்பாதியில் நிறையவே வரும் அசின், பிற்பாதியில் சற்றுக் காணாமல் போய்விடுகிறார். இருந்தாலும் ஒரு மாதிரியா தான் இருக்காங்க. அஜித்தின் அம்மாவாக வருப ரொம்ப கிழுகிழுப்பூட்டுறா [அட flash back இல அவ இளமை]
என்ன இருந்தாலும், நம்ம கமல்காசனுக்கு அப்புறம் பரத நாட்டிய வேடம் ஏற்று அஜித் தான் நடித்திருக்கிறார் [முன்னணி கதாநாயகன்களில்]. அதுவும் இப்படி ஒரு கதையோடு வேறு ஒரு வரும் நடிக்க வரமாட்டார்கள். தங்கள் image போய்விடும் என்று பயப்பிடுவார்கள். அஜித்தின் டயலாக்குகளும் இல்லை.
எனக்குப் பிடித்த கட்டம்:
ரமேஷ் கண்ணா ஒரு கட்டத்தில் “என்ன காதலுக்கு மரியாதையா என்பார்”. அஜித் ஒரு பார்வை பார்ப்பார். உடனே ரமேஷ் கண்ணா “நீதான் ‘காதல் மன்னன்’ ” என்று சொல்லி சில அஜித்தின் படங்கள் பெயர் சொல்லுவார். கடைசியில் “இவன் ‘அட்டகாசம்’ தாங்க முடியலப்பா” என்று சொல்லுவார். இப்படியும் டயலாக் வைக்க அஜித் அனுமதித்து இருக்கிறார் தனே.
தர்மபுரி ரஜினியாக, சலங்கை ஒலி கமலாக, கடைசியில் “நாயகன்” ஆக முடிகிறது.
குடும்பத்தோடு போய்ப் பார்க்கலாம். ஆபாசக் கட்டங்களோ, அகோரக் காட்சிகளோ இல்லை.
_____
CAPital
ஆணிவேர்
ஆணிவேர்
எனது வரிசையின் இருமருங்கிலும் வெள்ளைக்காரங்கள் உட்கார்ந்து
இருந்தார்கள். எனக்கு ஆச்சரியமாகக் கூட இருந்தது. அட வெள்ளைக்காரங்களும்
வந்திருக்கிறார்கள் நம்ம படத்தைப் பார்க்க என்று.
படத்தின் தொடக்கத்தில் எழுத்தில் ஏதேதோ போட்டார்கள். அதை
வாசித்து முடிப்பதற்குள் அவை மறைந்து விட்டன.
படத்தின் பெயரோட்டத்தில் கறுப்பு வெள்ளை நிறத்தில் மற்றய
சுதந்திர போராட்டங்கள் காட்டப்படுகிறது. சே, பிடல் காஸ்றோ, மற்றும்
நெல்சன் மண்டேலா என்று எல்லாறையும் காட்டுகிறார்கள். மகாத்மா காந்தியைக்
காட்டியதாக ஞாபகம் இல்லை.
படம் தொடங்கவும் எனது இருமருங்கிலும் அமர்ந்திருந்த வெள்ளையர்கள்
எழும்பிப் போனார்கள். அவர்கள் படம் மாறி வந்து உட்கார்ந்து விட்டார்கள்.
ஆங்கில/ஃபிரென்ஞ்சு subtitle கொடுத்திருந்தால் இருந்திருப்பார்களோ என்னமோ
தெரியாது.
படத்தின் தொடக்கத்திலேயே கோர தாண்டவத்தைக் காட்டுகிறார்கள். இதை
இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்துக் காட்டி இருக்கலாம். ஆனால், தொடங்கிய
விதம் சரியாகத் தான் இருந்தது.
இராணுவத்தால் மக்கள் படும் பல துன்பங்களை கதையோடு சொல்லி
இருக்கிறார் இயக்குனர். புலிகளின் நிதர்சனம் வீடியோ பிரதியில் வருவது போல்
அகோரமான காட்சிகளைக் காட்டாமலேயே உண்மையை உணர்த்தி இருக்கிறார்.
என்னைத் தொட்ட கட்டம்:
கதாநாயகனையும் [தமிழீழத் தமிழன்], கதாநாயகியையும் [இந்தியத் தமிழிச்சி]
இலங்கை இராணுவம் செம அடி அடித்து விட்டுச் செல்லும். காயங்களுடன்
இருக்கும் மதுமிதாவைப் பார்த்து, நந்தா சொல்வார் “Welcome to
Jaffna”.
இந்தப் படம் இந்திய மக்களுக்காகவே எடுக்கப்பட்டதாகத் தான்
உணர்கிறேன். மதுமிதாவை கேட்கும் கேள்விகளில் அது வெளிச்சம். நந்தாவின்
மதுமிதா மீதான கோபமான் கேள்விகள் அடிமேல் அடி அடித்து இனித் துன்பம்
வலிக்காது என்று போன மக்களின் கோபக் கனல்களாக தெறிக்கிறது. படு
துன்பத்தில் வருமே ஒரு கோபம் அப்படி.
அது மட்டுமல்லாமல், ஒரு கட்டத்தில் நந்தா கப்பலோடு இறந்து
போனவர்களை பார்த்துவிட்டு படம் பார்க்கிறவர்களை பார்த்து கேள்வி கேட்பார்.
“குழந்தைகள் தத்தளிக்கும்போது காப்பாற்ற வேண்டும் என்று உனக்குத்
தோன்றவில்லையா?” இது இந்திய கடலில் தத்தளித்து இறந்த தமிழர்களை வேடிக்கை
பார்த்த இந்தியாவிற்காக. கடைசியாக அக் கேள்விகள் கடவுளுக்கு
கேட்கப்படுவதாக முடிப்பார்.
மக்களின் இடப்பெயர்வை நிஜமாக காட்டி இருக்கிறார். ஆனால் ஏதோ ஒரு
தொடங்கு கோட்டிலிருந்து நடக்க ஆரம்பிப்பது போல் முன்னுக்கு செல்பவர்கள்
ஒரு நேர் வரிசையில் செல்கிறார்கள். இதை மட்டும் கன்னத்தில் முத்தமிட்டாள்
படத்தில் இடப்பெயர்வை காட்டியது போல் இடையிலிருந்து காட்டி இருக்கலாம்.
எல்லோரும் தொப்பியும் போட்டிருந்தார்கள். எனக்கு அப்படி ஞாபகம்
இல்லை.
படம் முடிந்த பின் பெயரோட்டம் போடும்போது முழுக்க முழுக்க
தமிழிலேயே போடப்படுவது தமிழீழ பாணியை கையாண்டிருப்பதைக் காட்டுகிறது.
ஆனால், ஒரு இடத்தில் நந்தா ஆவேசப் பட்டுப் மக்கள் முன்னிலையில் பேசுவார்.
அதில் அவர் முழுமையான வசனங்களில் சுத்தத் தமிழில் பேசுவார். இப்படி யாரும்
அங்கு பேசுவதாக எனக்கு ஞாபகம் இல்லை.
இந்தப் படத்தை இன்னுமொரு விதமாக, உவமையாக மறைந்திருக்கும்
கருத்தாகவும் பார்க்கிறேன். மதுமிதா முதல் தடவை யாழ்ப்பாணம் வரும்போது,
தமிழ் மக்களை சரியாகப் புரிந்து கொள்ளாதவ. மீண்டும் இந்தியா சென்று பல
காலங்களுக்குப் பின் திரும்பவும் யாழ் வருகிறா. நந்தா சொல்வார், இன்னும்
கடவுள் என்னை உயிரோடு வைத்திருப்பது நீயும் நானும் பிரியக்கூடாது
என்பதற்காகத் தான் என்னவோ. விளங்குதா இலை மறை காயாக இருப்பது?
சரி, மதுமிதா நன்றாகவே செய்திருக்கிறார். நந்தாவும் நன்றாகத்
தான் செய்திருக்கிறார். கோபப்படும்போது மக்களின் குமுறல்களை
வெளிக்கொணர்ந்து இருக்கிறார். இருந்தாலும் ஒரு தமிழராக இல்லாமல் [தெலுங்கு
காறி] இந்தப் படம் இந்தியாவில் தடை செய்யப்படலாம் என்று தெரிந்தும்
சம்பளம் ஏதும் பேரம் பேசாமல் நடித்து இருக்கிறாரே. அதற்காகவே அவருக்கு
நன்றி சொல்லலாம். நந்தா தானாகவே முன்வந்ததற்காக அவருக்கும் ஒரு
நன்றி.
இசை மிக அருமை
இயக்குனருடனான நேர்காணலை இங்கே பார்க்கலாம்: ஆணிவேர் -
ஜான்
சேர்க்கப்பட்டது I: 2006/10/17 @ 8:48 PM [GMT
-5]
தொப்புழ் கொடி உறவை சுட்டிக்காட்டவோ என்னவோ தமிழ் நாட்டிலிருந்து வருபவர்
பெண்ணாக கதை உருவாக்கப்பட்டுள்ளது.